Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அவர், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தம்பி என்பதை தவிர கட்சியில் வேறு எந்தவித தொடர்பும், அடையாளமும் இல்லை. திவாகரனுடைய கருத்துகள் எங்கள் கட்சியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. உறவு வேறு, கட்சி வேறு. திவாகரனுக்கும் அ.ம.மு.க.வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.“ என்று அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் கூறியுள்ளதாவது, “திவாகரனுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. மைக்கை பார்த்தவுடன் ஏதேதோ பேசுகிறார். அ.ம.மு.க.வில் அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை என காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். திவாகரன் பழசை எல்லாம் மறந்து விட்டார்.

கடந்த 1984ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி நமது கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதில் தொண்டர் படையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் திவாகரன். அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டவருக்கு வேலை செய்தவர். 2011ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வெற்றி பெற்றபோது, மன்னார்குடியில் மட்டும் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் திவாகரனுடன் பழக்கம் இருந்ததால்தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. திவாகரன், பொதுச்செயலாளர் சசிகலாவை மீட்டெடுப்பேன் என்கிறார். ஆனால் பொதுசெயலாளர் சசிகலாவை வெளியே எப்படி எல்லாம் பேசுகிறார் என எங்களுக்குதான் தெரியும்.

சசிகலாவையும் என்னை பற்றியும் திவாகரன் தவறாக பேசுகிறார் என எங்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புகார் கூறி வருகின்றனர். சசிகலா மீது காண்பிக்க முடியாத கோபத்தை திவாகரன் என் மீது காட்டுகிறார். இதனால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. இந்த விஷயத்தை நான் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. திவாகரனை பற்றி என்னைவிட அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அதிகமாக தெரியும். கடந்த 2 மாதமாகவே என்னை பற்றி திவாகரன் தவறாக பேசி வருகிறார் என என்னிடம் தகவல் கூறினார்கள். அதற்கு நான் பரவாயில்லை விட்டு விடுங்கள் என்று கூறினேன். சொந்தக்காரர் என்பதால் எல்லாவற்றையும் கேட்க முடியாது.

தமிழகத்தில் சில பகுதிகளில் ஏஜென்டுகள்போல் ஆட்களை வைத்து கொண்டு தவறாக பிரசாரம் செய்து வருகிறார். சிறையில் உள்ள சசிகலாவை திவாகரன் ஒருமுறைகூட சென்று பார்த்ததில்லை. கட்சி நிர்வாகிகளிடமே மிகவும் மோசமாக பேசி வருகிறார் என என்னிடம் வருத்தத்துடன் கூறினார்கள். இது தனி நபர் பிரசாரம். இவர்களால் என்ன செய்ய முடியும். திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒரு நாள்கூட திவாகரனிடம் அரசியல் பற்றி பேசியது கிடையாது. திவாகரனை நான் ஒரு ஓட்டாகத்தான் பார்க்கிறேன். ” என்றுள்ளார்.

0 Responses to திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: டி.டி.வி.தினகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com