கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்தார் அந்தப் பெண். நாட்கள் ஆக ஆக குற்ற உணர்ச்சியால் துடித்த அந்தப் பெண், கள்ளக்காதலனை உதறிவிட்டு அப்ரூவராக மாறியிருக்கிறார். இந்தக் கொடூரமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண், கொலை செய்யப்பட்ட அவரது கணவன், அந்தப் பெண்ணின் கள்ளக்காதலன் என மூவருமே ஆசிரியர்கள். கல்விப் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கம் தவறியதால் இன்று கிரிமினல்களாக நிறுத்தப்பட்டு உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் வரலாற்று ஆசிரியை சுமதி. இவருக்கும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தனசேகருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த ஆசிரிய தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இனிதாக நகர்ந்தது வாழ்க்கைப் பயணம்.
சுமதியின் மனம் எப்படி திசை மாறியது? இப்போது போலீஸ் பிடியில் இருக்கும் சுமதியை சந்தித்தோம். ''என் வீட்டுக்காரர் தனசேகர், நாகராஜன் தோட்டம்ங்குற ஊருல இருக்கும் தொடக்கப் பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்தாரு. நான் பழையனூர்ல இருக்கும் வேணு உடையார் நடுநிலைப் பள்ளியில வரலாற்று டீச்சரா இருக்கேன். எங்க ஸ்கூல்ல வரலாற்று ஆசிரியராக இருக்கும் ராஜன் ரொம்பவும் இனிமையா பேசுவாரு. அவரு கிளாஸ் எடுக்குறதும் ரொம்பவும் நல்லா இருக்கும். அவருடையப் பேச்சுதான் என்னை அவர் பக்கம் திருப்பிச்சு. எனக்கும் அவரைப் பிடிச்சிருந்துச்சு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் நெருங்கிப் பழக ஆரம்பிச்சோம். அவருக்கும் ஏற்கெனவே கல்யாணம் ஆகிடுச்சி. ரெண்டு பேருமே அதைப்பத்தி கவலைப்படலை. எங்க நெருக்கம், மனசால மட்டும் இல்லாமல் உடல் அளவிலும் அதிகமானது. கடந்த ஏழு வருஷமா நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம். ஒரு நாள்கூட அவருகிட்ட பேசாம நானோ, என்கிட்ட பேசாம அவரோ இருந்தது இல்லை. ரெண்டு பேருமே விவாகரத்து வாங்கிட்டு ஒன்றாகவே வாழலாம்னு நினைச்சோம். திடீர்னு ஒருநாள் என்கிட்ட, 'உன் வீட்டுக்காரன் உயிரோட இருந்தால், நாம ஒண்ணு சேர முடியாது. அவனை முடிச்சிடலாம் சுமதி’னு சொன்னாரு. எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு.
2011-ம் வருஷம் என் வீட்டுக்காரர் ரோட்டுல போயிட்டு இருக்கும்போது, காரில் சென்று அவர் மீது மோதி ஆக்ஸிடென்ட் செஞ்சாரு ராஜன். அதுல என் வீட்டுக்காரருக்கு கால் முறிஞ்சிடுச்சு. ஆனா தப்பிச்சுகிட்டாரு. அதுக்கப்புறம், 'நீ அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வெச்சுடு. நான் உன் வீட்டுக்கு விஷ ஊசியோடு வரேன்’னு சொன்னாரு. நானும் அப்படியே செஞ்சேன். ஒரு டாக்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என் வீட்டுக்காரருக்கு விஷ ஊசி போட்டுவிட்டாரு. எனக்கு மனசு கேட்காம, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் அவரைக் காப்பாத்திட்டேன்.
அதுக்கப்புறம், ஸ்கூல்ல என்னைப் பார்த்து, 'எதுக்காக நீ அவனைக் காப்பாத்தின..? அவன் உசுரோட இருந்தா, நாம ஒண்ணு சேர முடியாது. நீ அங்கே இருந்தாதானே உனக்கு மனசு கஷ்டமா இருக்கு. நீ பிள்ளைங்களை கூட்டிட்டு உன் அம்மா வீட்டுக்குப் போயிடு. வீட்டுச் சாவியை என்கிட்ட கொடுத்துடு. மற்றதை நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னாரு. நான் தயங்கினேன். 'நான் சொல்றதைக் கேட்கலைன்னா என்ன பண்ணுவேன்னே தெரியாது. நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போட்டோ என்கிட்ட நிறைய இருக்கு. நீ ஏதாவது அடம்பிடிச்சா அந்த போட்டோ எல்லாத்தையும் நெட்ல போட்டுருவேன்’னு மிரட்டினாரு. அதனால நானும் அவரு சொன்னபடி அம்மா வீட்டுக்குப் போயிட்டேன்.
அன்றைக்கு ராத்திரி, 'வீட்டுல நாய் இருக்கு. அதை அங்கிருந்து இழுத்துட்டு வந்துட்டேன்’னு மெசேஜ் அனுப்பினாரு. அடுத்த நாள், காலையில போன் செஞ்சாரு. 'எல்லா நல்லபடியா முடிஞ்சது. இனி யாருகிட்டயும் பேசாதே... இந்த சிம் கார்டை உடைச்சுப் போட்டுடு!’னு சொல்லிட்டுப் போனை வெச்சுட்டாரு. அதுக்கப்புறமா எங்க சொந்தக்காரங்ககிட்ட இருந்து அவரு இறந்துட்டாருன்னு எங்க வீட்டுக்கு போன் வந்துச்சு.
நானும் எல்லோரையும்போல பதறியடிச்சுட்டு போய் அழுதேன். போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு உடலை அடக்கம் பண்ணிட்டோம். இதெல்லாம் நடந்தது கடந்த மே மாசம் 14-ம் தேதி. அதுக்கப்புறம் நானும் ராஜனும் சகஜமா இருந்தோம். ஆனாலும் என் மனசுக்குள்ள ஏதோ உருத்தலாவே இருந்துச்சு. என் பிள்ளைகளையும் ராஜன் கொலை செஞ்சுட்டா என்ன பண்றதுன்னுதான், நானே உண்மையைச் சொல்லிட்டேன்'' என்று எந்தச் சலனமும் இல்லாமல் பேசினார்.
கொலை செய்யப்பட்ட தனசேகர் வீட்டுக்குப் போனோம். அவரது அண்ணன் அருள் நம்மிடம், ''கடந்த மே மாசம் என் தம்பி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் போன் பண்ணினாரு. 'உங்க தம்பி வீட்டுல யாரும் இல்லையா... பேப்பர் பால் பாக்கெட் எல்லாம் ரெண்டு நாளா வெளியில கிடக்குது’னு கேட்டார். போன் செய்து பார்த்தேன். யாரும் எடுக்கலை. வீட்டுக்குப் போய் பார்த்தா, என் தம்பி இறந்துகிடந்தான். பக்கத்துல விஷ பாட்டில் இருந்துச்சு. உடம்பெல்லாம் கீறல் இருந்துச்சு. உடனே போலீஸுக்குத் தகவல் சொன்னேன். போலீஸ் வந்து பார்த்துட்டு தற்கொலை என்று வழக்குப் பதிவுசெஞ்சாங்க.
புருஷன் செத்து மூணே நாள்ல ஸ்கூலுக்குப் போறேன்னு சுமதி கிளம்பிட்டா. எங்களுக்கு சந்தேகம் வந்து சுமதி பின்னாடியே போய் பார்த்தோம். ஸ்கூல் போனதும் சுமதி யார் கூடவோ போன்ல சிரிச்சுப் பேசுறதும், மெசேஜ் அனுப்புறதுமா இருந்தா. அக்கம் பக்கத்துல நாங்க விசாரிச்சதுல, சுமதியும் ராஜனும் ஒண்ணா சுத்துவாங்கன்னு தெரிஞ்சது. சுமதியை விசாரிக்கச் சொல்லி போலீஸ்ல புகார் செஞ்சோம். ஆனா, அவங்க கண்டுக்கவே இல்லை. தம்பி செத்து அஞ்சு மாசமா போராடிட்டு இருக்கோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போ விஷயம் மீடியா வழியா வெளியில தெரிஞ்ச பிறகுதான், போலீஸ் என் தம்பி பொண்டாட்டியைக் கைது செஞ்சிருக்காங்க!'' என்று கலங்கினார்.
அருகில் இருந்த தனசேகரின் தம்பி தமிழரசன், ''அண்ணியும், ராஜனும் பைக்கில் ஒண்ணா சுத்துறாங்கனு எனக்குத் தெரிஞ்சதும் நானே அவங்ககிட்ட, 'அண்ணி இதெல்லாம் தப்பு’னு சொன்னேன். அதுக்கு அவங்க, 'ஒரே ஸ்கூல்ல இருக்கோம். பேசாம போகாம இருக்க முடியுமா?’னு கேட்டாங்க. அண்ணனும் ஒரு தடவை சந்தேகப்பட்டுக் கண்டிச்சாரு. அப்பவும் அவங்க மழுப்பிட்டாங்க. கார் ஆக்ஸிடென்ட் சாதாரணமா நடந்தாதான் நினைச்சோம். ரெண்டாவது தடவை தூக்க மாத்திரையை தோசையில் கலந்து அண்ணனுக்குக் கொடுத்திருக்காங்க. அவரு மயக்கமானதும் அந்த ராஜன் ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்து விஷ ஊசி போட்டிருக்கான். நல்ல வேளையா அந்த ஊசி வளைஞ்சி, மருந்து முழுக்க உள்ளே போகலை. அதுக்கப்புறம்தான் அண்ணி ஊருக்கு கிளம்பிப் போனதும் அந்த ராஜன் வீட்டுக்கு வந்து அண்ணனுக்கு வாயில விஷத்தை ஊத்திக் கொலை செஞ்சிருக்கான்'' என்றவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆசிரியர் ராஜனை சந்திக்க அவரது கிராமமான குன்னியூருக்குச் சென்றோம். வீட்டில் ராஜன் இல்லை. ராஜனின் மனைவி சுதா நம்மிடம், ''அவரு எங்க இருக்காருன்னு தெரியலைங்க. போனையும் எடுக்கலை. கொலை செய்யுற அளவுக்கு அவரு தப்பானவரு இல்லைங்க. என் வீட்டுக்காரரைப் பழிவாங்க வேண்டும்னு சிலர் சதி செய்றாங்க. அதுக்கு அந்த சுமதியும் உடந்தையாக இருக்காங்க. அவரோட சம்பளத்தை நம்பித்தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு. இனி அதுவும் இல்லைனு ஆகிடுச்சு. நான் ஏதாவது பொழப்பைப் பார்த்தாதான் என் புள்ளைங்களை கரையேத்த முடியும். தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க...'' சேலையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதார்.
இந்த விவகாரத்தில் ஹைலைட், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாண்டுரங்கனின் பேச்சுதான். சுமதியுடன் அந்தத் தலைமை ஆசிரியர் பேசிய ஆடியோ பதிவு இப்போது சூட்டைக் கிளப்பியுள்ளது. அதில், 'நீ எதுக்கும் கவலைப்படாதம்மா... நாங்க இருக்கோம். கல்வித் துறை அதிகாரிங்ககிட்ட பேசிட்டோம். எந்தப் பிரச்னையும் இல்லை. ஏ.கே.எஸ்.விஜயன் தம்பிகிட்டயும் பேசியாச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துடலாம்!’ என்று கள்ளக்காதலர்களை சேர்த்துவைக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.
அந்த பாண்டுரங்கனையும் சேந்தித்தோம். ''ராஜனை எனக்கு டீ சாப்பிடும்போது மட்டும்தான் பழக்கம். நான் கல்வி சம்பந்தமாத்தான் பேசினேன். யாரோ தப்பா சொல்லியிருக்காங்க..'' என்று மட்டும் சொன்னார்.
பாண்டுரங்கன் பேச்சில் நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயனையும் இழுத்திருப்பதால், அவரிடமும் பேசினோம். ''எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க...'' என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
வழக்கை விசாரித்துவரும் கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமொழியிடம் பேசினோம். ''இந்த வழக்கைப் பொறுத்தவரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், தடயவியல் அறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்களை வைத்துதான் விசாரணை நடத்த வேண்டும். முதலில் தற்கொலை வழக்காகப் பதிவுசெய்துள்ள நிலையில், கொலை வழக்காக மாற்ற சட்ட ரீதியாக சில ஆவணங்கள் எங்களுக்கு வர வேண்டும். அதுபற்றிதான் நாங்கள் விசாரித்து வந்தோம். அதற்குள் விவகாரம் வேறு மாதிரி போனதால், கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம். சுமதியை கைது செய்துவிட்டோம். இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும் மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம்'' என்றார்.
ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. ஒழுக்கம், பண்பு, கலாசாரம் என அத்தனையையும் ஒருசேர மாணவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் உன்னத பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. அப்படிப்பட்டவர்கள் செய்யும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே அல்லவா தலைகுனிவு!
American technology….india is improving….
காலை எழுந்ததும் கணவனைக் கொன்று
மாலை முழுவதும் மயங்கி விழுந்து......திருவள்ளுவர்.
காணாமல் போன காதலைத் தேடி
கழுதை போல கணவனைத் திட்டி......ஒளவையார்.