Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் நடைபெற்ற எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கைப் போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களைத் தர வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு எழ தேவையில்லை.  எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும் போது அது, எழுக தமிழ், எழுக சிங்களம், எழுக முஸ்லிம் என்ற ஒட்டுமொத்த இலங்கையரை விழிப்பதாகத்தான் அர்த்தப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளத்துக்கு உள்ளே தமிழருக்கும், ஏனைய அனைத்து இனத்தவருக்கும் உரிய உரிமைகளின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சமத்துவம் என்ற அடிப்படை நிபந்தனை உறுதிப்படுத்தப்படாவிட்டால், இலங்கையர் என்ற அடையாளம் அர்த்தமற்று போய்விடும்.

எழுக தமிழ் போராட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதாக நான் நம்புகிறேன். ஆகவேதான், எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களை தர வேண்டும் என நான் சொல்கிறேன். அதன்மூலம், இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருக்கும், எமக்கும் இது உதவியாக இருக்க வேண்டும்.

எழுக இலங்கை என்ற போராட்டம்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியாகும். அதை நாம் நடத்திக்கொண்டு இருக்கின்றோம். நாடு முழுக்க சென்று கருத்துகளை கோரி, குழுக்களை அமைத்து, வாதவிவாதம் செய்து, முன்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

இலங்கையில் இன்னொரு யுத்ததிற்கு இடமில்லை என ஜனாதிபதி ஐநாவரை சென்று கூறுகிறார். யுத்தம் வரக்கூடாது என்றால், யுத்தம் நடைபெற்றமைக்கான காரணங்களை நாம் தேட வேண்டும். அவற்றுக்கு உரிய பதில்களை தேட வேண்டும். அது இப்போது நடப்பதாக நான் நினைக்கின்றேன். இந்த நடப்பு, நீண்டகாலம் இழுத்தடிக்கப்பட முடியாது. இன்னமும் சில மாதங்களில் அது முடிவுக்கு வந்துவிட வேண்டும். இதுதான் எழுக இலங்கை போராட்டம்.

எழுக தமிழ் என்ற போராட்டத்துக்கு பதில் இந்த எழுக இலங்கை என்ற போராட்டம்தான். ஆகவே அந்த பதிலில் ஒரே நாட்டுக்குள் இன சமத்துவம், மொழி சமத்துவம், அதிகாரப்பகிர்வு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் எழுக இலங்கை என்ற போராட்டம் தோல்வியடையும். எழுக இலங்கை போராட்டம் தோல்வியடைந்துவிடக்கூடாது என நான் விரும்புகிறேன்.

எழுக தமிழ் போராட்டத்துக்கு பதில், எழுக சிங்களம் என்று ஆகி விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். எமது கையைமீறி அத்தகைய ஒரு பதில் எழுந்துவிட்டால் அது தூரதிஷ்ட்டவசமானது ஆகும்.  பத்தாண்டுகளுக்கு மேல் பட்டபாட்டின் பலனையும் நாம் பார்த்து விடுவோம். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் வரும். அதற்கும் இந்த எழுக தமிழ் வலு சேர்க்க வேண்டும்.

எனவே என்னை பொறுத்தவரையில் இந்த எழுக தமிழ் போராட்டத்தை நான் முரணாக பார்க்கவில்லை. இலங்கையில் பல பாகங்களில் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. மலையகத்தில் ஒரு தேவைப்பாடு எழுந்தபோது நமது அமைச்சர்களுடன் சேர்ந்து நான் கொழும்பில் நடுத்தெருவில் அமர்ந்தேன். அதை விமர்சனம் செய்தவர்களைபற்றி நாம் அலட்டிக்கொள்ளவில்லை. எனவே தமிழ் முற்போக்குக் கூட்டணியால் இந்த வடபுலத்து எழுக தமிழ் போராட்டத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது.” என்றுள்ளார்.

0 Responses to எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு அழுத்தங்களைத் தர வேண்டும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com